கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி அதன் விளக்கம் என்ன?
அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு சமர்ப்பணம்..
அருவமும் உருவம் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!
- கந்தபுராணம்
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு.
சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.
இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது.
சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து, இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை அனைவரும் அறிந்ததுதான்.
சூரபத்மனை முருகப் பெருமான் முற்றிலும் வதம் செய்யா மயிலாக வந்தபோது வாகனமாகவும் சேவலாக வந்த போது கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.
முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயினி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.
சிவ – பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை.
எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால் தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, ‘நான்’ என்னும் அகங்காரம் சேவலாகவும், ‘எனது’ என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகப் பெருமான்.
அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிகமுக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.
குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம்.
சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடிக்கொள்வான் என்ற பொருளும். முனிவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும்.
சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டிவரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.
இந்த ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.
அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம் – உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது.
ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.
உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.
வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.
கந்த புராணம் படிப்பது, சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது கேட்பது விசேஷம்.
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை கொண்ட சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.
ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
உங்கள்
உத். தும்பிக்கை நண்பன்
குறிப்பு : சஷ்டி விரதம் நாட்கள் இன்று 20.10.2017 முதல் 26.10.2017 வரை நடைபெறுகிறது.
#கந்த_ஷஷ்டி #சஷ்டி_விரதம் #உத்_தும்பிக்கை_நண்பன் #புலி #சிவா #உத்தரமேரூர் #அத்வைத #சைவ
No comments:
Post a Comment