Wednesday, January 25, 2012

2ஜி ஊழலை தூக்கி சாப்பிடும் அளவிற்கு மகாப் பெரிய ஊழலான

ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஊழல் நிரூபணம்: இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட 4 பேருக்கு தடை'
2ஜி ஊழலை தூக்கி சாப்பிடும் அளவிற்கு மகாப் பெரிய ஊழலான ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த ஊழல் புகாரில் சிக்கிய இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட 4 பேர் மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்ததால், அவர்கள் எந்த ஒரு அரசு பதவியிலும் நீடிக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான "இஸ்ரோ" அனுப்பும் செயற்கை கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
இந்த அலைக்கற்றைகளை வர்த்தக ரீதியாக ஒதுக்கீடு செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காக "இஸ்ரோ"வின் துணை நிறுவனமாக உருவாக்கப்பட்டது தான் "ஆண்ட்ரிக்ஸ்" என்ற நிறுவனம்.
இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனத்திற்கு, ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
20 ஆண்டுகள் வரை இந்த அலைவரிசையை பயன்படுத்திக் கொள்ள மிக மலிவான கட்டணத்தில் ரூ. 1000 கோடியை மட்டுமே தேவாஸ் மல்டி மீடியாவிடமிருந்து பெற்றுக்கொண்டது "இஸ்ரோ"வின் துணை நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ்.
ஆனால் பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். தொலைபேசி நிறுவனங்களுக்கு 20 மெகா ஹெட்ஸ் அலைவரிசைகளை ஒதுக்குவதற்கு 12 ஆயிரத்து 847 கோடி ரூபாயை கட்டணமாக பெற்றது ஆண்ட்ரிக்ஸ்.
தனியார் நிறுவனத்திற்கு மிக சல்லிசான விலையில் அலைக்கற்றைகளை ஒதுக்கிவிட்டு, அரசு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல்.க்கு பல மடங்கு கட்டணத்தை வசூலித்தது ஆண்ட்ரிக்ஸ்.இதுதான் நியாயமான கட்டணம் என்றால், தனியார் நிறுவனத்திற்கு அந்த அளவுக்கு மலிவான விலைக்கு அலைக்கற்றைகளை ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் ஊழல் நடந்திருப்பது பட்டவர்த்தனமாக அம்பலமானது.
இது குறித்த தகவல் அம்பலமானதும் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்ட பிரதமர் மன்மோகன் சிங்,இந்த முறைகேடு குறித்தும், ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் குறித்தும் ஆய்வு செய்ய கடந்த ஆண்டு மே மாதம், முன்னாள் மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர் பிரடியுஸ் சின்ஹா தலைமையில் குழு ஒன்றை அமைத்தார்.
இந்த குழு நடத்திய ஆய்வில் மோசடி நடந்தது உண்மைதான் என தெரியவந்தது.
இந்நிலையில் அந்த ஆய்வு அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டத. இந்த குழுவின் அறிக்கையை மற்றொரு குழு ஆய்வு செய்தது.அந்த குழுவும் குற்றச்சாட்டை உறுதி செய்தது.
இந்த அறிக்கை மீது தற்போது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இந்த ஊழலில் தொடர்புடைய முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் எதிர்காலத்தில் எந்த அரசு துறைகளிலும் பதவி வகிக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அவர் மட்டுமல்லாது இஸ்ரோவின் முன்னாள் அறிவியல்துறை செயலாளர் கே பாஸ்கரன் நாராயணன்,ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் கே ஆர் ஸ்ரீதரமூர்த்தி,இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் கே என் சங்கரா ஆகியோரும் எந்த வித அரசு பதவிகளிலும் வகிக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகல் அனைத்து மத்திய அரசு செயலாளர்கள், மாநில அரசின் தலைமைச்செயலாளர்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.