Thursday, December 20, 2012

சென்னையில் சில்லறை வியாபாரிகளுக்கு பார்தி வால்மார்ட் நிறுவனம்

'சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது!’ என்று எதிர்ப்புக் குரல் எழுப்பி தேசமே பரபரத்துக் கிடக்கிறது. ஆனால், அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தமிழகத்தில் கால் பதித்தேவிட்டது வால்மார்ட். இத்தனைக்கும் சில்லறை வணிகத்தில் அந்நியர் முதலீடு கூடாது என்று எதிர்ப்பவர் தமிழகமுதல் வர் ஜெயலலிதா. அப்படி எனில், ஒரு மாநிலத்தின் முதல்வரை மிஞ்சிய அதிகாரம் இருக்கிறதா அந்த அந்நிய நிறுவனங்களுக்கு? அதிகாரம் அல்ல; தந்திரம் இருக்கிறது.
இங்கு பலரும் எதிர்ப்புக் கோஷம் எழுப்பிக் கொண்டு இருக்க, சென்னை வானகரம் அருகே மடமடவெனக் கட்டடங்களை எழுப்பத் துவங்கி விட்டார்கள் பார்தி வால்மார்ட் நிறுவனத்தினர். அண்ணா நகரில் அலுவலகம் அமைத்துவணிகர் களை வளைக்கத் துவங்கிவிட்டார்கள். தமிழகம் முழுக்கப் பரவியிருக்கும் சுமார் ஒரு லட்சம் வணிகர்கள் திகைத்து நிற்கிறார்கள். சென்னை யில் 'பார்தி வால்மார்ட்’ நிறுவனம், கடந்த 20 நாட்களில் மட்டும் சுமார் 2,500 சில்லறைவணிகர் களைத் தன்னுடைய உறுப்பினர்கள் ஆக்கிவிட்டது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட் டுக்கு மாநில அரசு அனுமதி அளிக்காதபட்சத்தில் இது எப்படிச் சாத்தியம்? இனி என்ன ஆகும்?
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையனிடம் விவரம் கேட்டோம். ''வால்மார்ட் நிறுவனம் சட்டத்தை மீறவில்லை. ஆனால், அது சட்டத்தின் ஓட்டைகளைப் பயன் படுத்துகிறது. அவர்கள் மொத்த வியாபாரம் என்கிற பெயரில் சில்லறை வியாபாரத்தை ரகசி யமாக மேற்கொள்வார்கள். நமது முதல்வரும் தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவர மாட்டோம் என்று தானே சொல்லி இருக்கிறார். தமிழ கத்தில் அந்நியர்களை வியாபாரம் செய்யவிட மாட்டோம் என்று சொல்ல வில்லையே. இந்த நுண் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேச லாபி செய்யத் தெரிந்தவனுக்கு ஒரு மாநிலத்தில் லாபி செய்யத் தெரியாதா? எம்.பி-க்களையே தங்களுக்காகப் பேசவைத்தவர்கள், இன்னும் சில நாட்களில் நம் எம்.எல்.ஏ-க் களையும் அவர்களுக்கு ஆதர வான நிலைப்பாடு எடுக்கவைப்பார்கள். நாளடைவில், 'அட... விலை குறைச்சலாத் தர்றான். அவன் வந்தா என்ன தப்பு?’ என்று மக்களையே பேசவைப்பார்கள். அப்புறம் சட்டப் படி சில்லறை வணிகம் செய்து நம் வணிகர்களை அடிமைகள் ஆக்குவார்கள்.
'உலகமயமாகிவிட்ட நிலையில் சுதேசம், அந்நியம் என்றெல்லாம் பேச வேண்டாம். ஒரு பொருளை குறைவான விலையில் அவர்கள் கொடுக்கும்போது, நீங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?’ என்பதுதான் பலரது வாதம். ஆனால், இதில் எவ்வளவு பெரிய அரசியல் அடங்கிஇருக்கிறது தெரியுமா? இன்று பொருட்களின் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? ஆன்லைன் சூதாட்ட வர்த்தகம், சேவை வரி, சுங்க வரி, உற்பத்தி வரி, வாட் வரி, வருமான வரி என சகல திசைகளில் இருந்தும் தாக்கும் விதவிதமான வரிகள்தான். ஒரே பொருள் பத்து பேரிடம் கைமாறி வரும்போது, பத்து இடங்களிலும் அதற்கு வரி விதிக்கப்படுகிறது. அந்த வரி விதிப்புகள்தான், பொருட்களின் விலையை அதிகரித்துவிடு கிறது.
அரிசி விலை ஏன் உயர்கிறது? விவசாயிகள் பெயரில் பெரும் நிறுவனங்களின் ஆட்கள் விவசாயிகளிடம் இருந்து ஒட்டுமொத்தமாக நெல் கொள்முதல் செய்து அதை அரசு குடோனில் இருப்புவைக்கிறார் கள். இந்த இருப்பைக் காட்டினால் வெளி நாட்டு வங்கிகள் மிகக் குறைந்த வட்டியில் கடன் அளிக்கும். நாடு முழுவதும் ஆங்காங்கே இப்படி நெல்லைப் பதுக்கிவைக்க... ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு அதிகரிக்கும். விலை கடுமையாக உயரும்போது இவர்கள் பதுக்கலில் இருக்கும் நெல்லை அதிக விலைக்கு விற்பார்கள். லாபத்துக்கும் லாபம். இடையே இருப்பைக் காட்டி மிகக் குறைந்த வட்டியில் கடன் வாங்கி அதிலும் லாபம். இவை மிகச் சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் இப்படி நிறையக் குளறுபடிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
தவறு என்று தெரிந்தும் அதை ஏன் ஊக்குவிக்கிறது மத்திய அரசு? சாதாரண வியாபாரிக்குத் தெரிந்த உண்மை, மெத்தப் படித்த பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் தெரியாதா? மிக நன்றாகத் தெரியும்.
இப்படி எல்லாம் தாறுமாறாக விலை உயர்ந்தால்தான், அந்தப் பழியை வணிகர்கள் மீது சுமத்தலாம். வணிகர்களை புரோக்கர் களாகச் சித்திரிக்கலாம். வெளிநாட்டுக்காரன் விலை குறைவாகக் கொடுக்கிறானே... அவனிடம் வாங்கினால் என்ன தப்பு என்று மக்கள் பிரதிநிதிகளை, மக்களைப் பேசவைக்கலாம். பிறகு, மக்கள் ஆதரவுடன் அந்நியர்களுக்கே நாட்டை மொத்தமாக எழுதிக் கொடுத்துவிடலாம். இப்போது நடப்பதும் இதுதான்.
இப்போது சென்னையில் வால்மார்ட் நிறுவனம், மற்றவர்களைவிட 32 சதவிகிதம் விலை குறைவாகத் தருவதாக வணிகர்களிடம் பேரம் பேசிவருகிறது. பலசரக்குக் கடை தொடங்கி மத அமைப்புகள் வரை உறுப்பினர் ஆக முடியும் என்கிறது. அப்படி எனில், அது மறைமுகமான சில்லறை வணிகம்தானே. இதனால், முதல் கட்டமாக கோயம்பேடு, கொத்தவால்சாவடி போன்ற மார்க்கெட்டுகள் அழிந்துவிடும். உற்பத்தியாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையே இருக்கும் ஏஜென்சிகள் காணாமல் போய்விடும். அப்படிப்பட்ட சூழலில் உற்பத்தியாளர் - வால்மார்ட் - சில்லறை வணிகர்கள் மட்டுமே இருப்பார்கள். உற்பத்தியாளர்கள் வால்மார்ட்டை நம்பி மட்டுமே இருக்க வேண்டும். ஏனெனில், மற்ற ஏஜென்சிகள் தொழிலில் காணாமல் போய் விடுவார்கள். சில்லறை வணிகர்களும் வால் மார்ட்டை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். அந்தச் சூழ்நிலையில் உற்பத்தியாளருக்கும் சரி... சில்லறை வணிகர்களுக்கும் சரி... வால்மார்ட் நிர்ணயிப்பதுதான் விலை. சில்லறை வணிகர்களுக்கும் ஆரம்பத்தில் அளித்த 32 சதவிகித விலைக் குறைப்பையும், அள்ளிக்கொடுத்த சலுகைகளையும் படிப்படியாக வால்மார்ட் நிறுவனம் ரத்துசெய்யும். கடைசியில், அவர்கள் வைத்ததுதான் சட்டம். சொன்னதுதான் விலை!'' என்று அதிர்ச்சி கிளப்புகிறார் வெள்ளையன்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, ''பார்தி வால்மார்ட் நிறுவனம் அனுமதி இல்லாமல் சென்னையில் செய்யும் குளறுபடிகளை உளவுத் துறையினர் மூலம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசென்று உள்ளோம். முதல்வர் விரைவில் எங்களைச் சந்திப் பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். என்ன தான் அவர்கள் கட்டடம் எழுப்பி, சில்லறை வணிகர்களிடம் பேரம் பேசினாலும் ஒரு மாநிலத் தில் தொழில் நடத்த அந்த மாநில அரசின் ஆதரவு தேவை. அதனால், முதல்வர் ஜெயலலிதா கட்டாயம் அவர்களை அனுமதிக்க மாட்டார் என்பதே எங்களின் ஒரே நம்பிக்கை!'' என்றார்.
தமிழ்நாடு நாடார் பேரவையின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் இன்னொரு கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகுகிறார். ''சுய வேலை வாய்ப்புகளை தமிழக அரசு ஊக்குவிக்கும் நிலையில், வால்மார்ட் இங்கு கால் பதிப்பது மிகவும் ஆபத்தான அறிகுறி. இங்கு சிறு முதலாளிகளாக இருக்கும் சில்லறை வணிகர்கள் எல்லாம் தங்களது தொழிலை விட்டு, அந்நியரிடம் வேலைக்காரனாகும் சூழல் ஏற்படும். ஆனால், மத்திய அரசு உலக ஒப்பந்தம் செய்துவிட்டது. இனி, இந்தியப் பொருளாதாரத்தைச் சுரண்டும் அந்நியரின் ஆதிக்கத்தைத் தடுக்க முடியாது. முதல்வர் ஜெயலலிதா கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால், தமிழகத்தில் அந்நிய நிறுவனங்கள் முழு வீச்சில் செயல்பட முடியாது. ஆட்சி மாற்றமோ காட்சி மாற்றமோ ஏற்பட்டால், அந்த நிலையும் மாறும்!'' என்கிறார் கரிக்கோல் ராஜ்.
இந்த விவகாரம் தொடர்பாக வால்மார்ட் நிறுவனத்தின் கருத்தை அறிய புதுடெல்லியில் இருக்கும் அவர்களது பதிவு அலுவலகத்தைப் பலமுறை தொடர்புகொண்டும் இதுகுறித்துப் பேச அவர்கள் முன்வரவில்லை. சென்னையில் சில்லறை வணிகர்களிடையே பிரசாரம் செய்துவரும் ராஜசேகர் என்பவரைத்தொடர்பு கொண்டேன். ''ஆம்... பார்தி வால்மார்ட் நிறுவனத்தின் பிரதிநிதி நான்'' என்று ஆரம் பித்தவரிடம், உண்மை நிலவரம் கேட்டதும், ''எனக்கும் அந்த நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை...'' என்று பேச்சைத் துண்டித்துக் கொண்டார்.
அந்நியரின் உரத்துக்கு மண்ணைப் பலி யாக்கினோம். பாழாய்ப்போனது விவசாயம். இப்போது கிழக்கிந்திய கம்பெனி பாணியில் ஊடுருவியிருக்கும் வால்மார்ட்டுக்கு நம்மவர் களின் வணிகத்தையும் பலி கொடுக்கப் போகிறோமா?!

வால்மார்ட் நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன?
சென்னையில் சில்லறை வியாபாரிகளுக்கு பார்தி வால்மார்ட் நிறுவனம் சொல்வது இது தான் - 'அதிநவீன மொத்த வியாபார ஸ்டோர் எங்களிடம் உள்ளது. சில்லறை வணிக பல சரக்குக் கடைகள், பழம், காய்கறி, இறைச்சிக் கடைகள், பொம்மை, ஸ்டேஷனரி கடைகள், உணவகங்கள், தாபாக்கள், ஸ்வீட் ஸ்டால்கள், பேக்கரிகள், அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மத அமைப்பு கள், தொண்டு நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங் கள் ஆகியவை எங்களிடம் உறுப்பினர் ஆகலாம். எங்களிடம் உறுப்பினர் ஆவதால் உங்களுடைய அனைத்துத் தேவைகளையும் ஒரே இடத்தில் நிறைவு செய்துகொள்ளலாம். வியாபாரிகளின் லாபத்தைச் சீராகப் பராமரித் திட தினம்தோறும் ஆகச் சிறந்த விலையில் பொருட்களை அளிக்கிறோம். இப்போதைக்கு உறுப்பினர் ஆவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. எங்களோடு இணையுங்கள். எங்கள் ஸ்டோரை உங்கள் குடோனாக நினைத்துக் கொள்ளுங்கள்!’

 

No comments:

Post a Comment